இரட்டை வேடங்களில் ஹீரோ.. இரு வேறு குணங்கள்.. ஒரே ஹீரோயின். ஒரு வில்லன். ஒரு ஹீரோ இறக்க மற்றவர் சுபமாக்கும் எத்தனையோ படங்களை MGR காலத்திலிருந்து இன்றைய கதாநாயகர்கள் காலம் வரை பார்த்துவிட்டோம்.
ஆனால் K.V.ஆனந்தின் மாற்றான் வித்தியாசம்; கதாநாயகர்கள் ஒரே உடம்பில் ஒட்டிப் பிறந்த இரட்டையர். கதையும் களமும் புதியது என்றார்கள்.
தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து (அல்லது பெரிதாகத் தோல்வியடையாத படங்களைத் தந்து ) வருகின்ற சூர்யாவும், வெற்றிப்படங்களையே தந்துவருகின்ற இயக்குனர் K.V.ஆனந்தும் ஒன்றாக இணைவது படத்தைப் பற்றி நம்பிக்கையையும் ஏற்றிவிட்டது.
ஆனால் உண்மையாக படத்தின் trailer மற்றும் சாருலதா விளம்பரம் ஆகியன மாற்றான் மீது எதிர்பார்ப்பைக் குறைத்திருந்தன என்பது உண்மை.
கொஞ்சம் விஞ்ஞானம் , கொஞ்சம் காதல், கொஞ்சம் துப்பறிதல் என்று வழமையான K.V.ஆனந்தின் பாணியில் இரட்டைவேடக் கலப்பையும் சேர்ந்து தூவி, சுபாவின் வசனங்கள், திரைக்கதையில் ஒரு சூப்பர் ஹிட் படத்தைத் தந்திருக்கலாம் தான்.
ஆனால் ஒரு சில இடங்கள் தவிர ஏனைய இடங்களிலெல்லாம் மாற்றான் இழுக்கிறது.
மரபியல் /மரபணு விஞ்ஞானி தனது பிள்ளைகளையே சோதனைக்கான காலமாகப் பிறக்க வைக்கிறார். ஒட்டிப்பிறக்கும் குழந்தைகள் சந்திக்கும் சவால்கள்.. தந்தையார் ஒரு விஞ்ஞானியாக இருந்து, கடுமையான உழைப்பு, முயற்சியால் வெற்றிகரத் தொழிலதிபராக மாறுவது.. அவரைச் சுற்றி நடக்கும் சதிகள், மர்மம், இரட்டையரின் காதல், அதன் பின்னான சண்டை, துரத்தல், முடிச்சவிழ்த்தல் என்று சொல்லும்போது பரபரவெனத் தெரிகின்ற இத்தனை விடயங்களின் தொகுப்பு எப்படியான ஒரு பூரணமான சூடான திரைப்படமாக வந்திருக்கவேண்டியது... சோர்வாக, சொதப்பலாக சூர்யாவுக்கு அண்மைக்காலத்தின் இரண்டாவது சறுக்கலாக வந்திருக்கிறது.
ஒட்டிப்பிறந்த இரட்டையரை இடைவேளை வரை ஒவ்வொரு காட்சிகளிலும் காட்டுவதில் எடுத்த சிரத்தையும், காட்சிக்குக் காட்சி காட்டிய நுணுக்கமும் பாராட்டுக்குரியவை.
அதிலும் பாடல் காட்சிகள், நடனங்கள், இடைவேளைக்கு முன்னதான நீளமான சண்டைக்காட்சி ஆகியவற்றில் ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன், எடிட்டர் அன்டனி ஆகியோரின் உழைப்பு மெச்சக்கூடியது.
குழப்பமான கதைக்களத்தை சாமர்த்தியமாக சுபா இரட்டையரின் கதை அனுபவத்தினாலும், காட்சிகளை சுவாரஸ்யமாக எடுத்திருப்பதிலும் நகர்த்த முயன்றிருக்கிறார் இயக்குனர்.
ஆனால் தமிழ் சினிமாவின் சில தவிர்க்க முடியா விடயங்கள் தடைக்கற்கள் ஆகின்றன.
இரட்டையரில் ஒருவர் அமைதியான, புத்திசாலி என்றால் மற்றவர் குறும்பான, முரட்டுத்தனம் மிக்கவராம். ஒரே காதலிக்கு இருவரும் ஆசைப்படுவது.
சூர்யாவின் நடிப்பைப்பற்றி இன்னும் பாராட்ட வேண்டுமா?
எத்தனையோ படங்களில் நிரூபிக்கப்பட்ட நடிப்பு.
இருவேடங்களையும் வேறுபடுத்திக் காட்டுவதில் ஜெயித்துள்ளார்.
ஆனால் மீசையில்லாத விமலனாக அவரது முகத்தில் முதுமை தெரிகிறது.
அகிலனாக முதல் பாதியில் கலக்கோ கலக்கல். (குறிப்பாக அந்த போலீஸ் நிலையக் காட்சி ;) )
ஆனால் ஏதோ ஒன்று முழுப்படத்திலும் சூர்யாவிடம் மிஸ்ஸிங்.
ஏழாம் அறிவு hangover இருப்பது போலவும் தோன்றுகிறது.
காஜல் அகர்வால். அழகு.. அவர் கண்கள் அதைவிட அழகு..
நடிக்கிறார் என்பதை விட அதிகமாக மொழிபெயர்க்கிறார்.. விழிகளாலும் எம்மையும்..
சின்மயியின் பின்னணிகுரல் மிக நன்றாக ஒத்துவருகிறது.
ஆனால் சூர்யா - காஜல் அகர்வால் காதல் ஏனோ அபத்தமாக உள்ளது.. நாணிக்கோணி பாடல் தவிர...
ஆரம்பம் முதலே.. ஏன், எதற்கு என்ற கேள்விகளை எழுப்பிப் பார்த்தால் ஆடுவதற்கும் பாடுவதற்கும் வெளிநாடு செல்வதற்கும் கதாநாயகனுக்கு ஒரு துணை தேவைப்பட்டுள்ளது.
விமலனிடம் காதல் வயப்பட்டு அப்படியே இடைவேளையின் பின் ஒரு பாட்டிலே காதல் மாறிவிடுவது கடுப்பாக்குகிறது.
நாணிக்கோணி பாடலின் இரண்டாவது சரணத்தின் பின்னணி இசையிலும் வரியிலும் இரண்டாவது சூர்யாவின் முகபாவம், கண்கள் மாறும் தோரணையில் இதோ இரட்டையர் ஒரு பெண் மீது காதல் கொள்வது வாலிக்குப் பின் வித்தியாசமாக K.V.ஆனந்தினால் இங்கே காட்டப்படப் போகிறதோ என்று பார்த்தால்.. ப்ச்...
பாடல் காட்சிகளை வழமைபோலவே K.V.ஆனந்த் கதை சொல்லப் பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனம்.
ரெட்டைக் கதிரே , இரட்டையரின் வளர்ச்சி, தந்தையின் முன்னேற்றம் ஆகியவற்றைக் காட்டவும்,
யாரோ யாரோ - கதாநாயக மாற்றம், காதல் மாற்றம் ஆகியவற்றைக் காட்டவும் பயன்படுத்தப்பட்டுள்ளன...
படம் என்னவோ இழுவையாக இருந்தாலும், பாடல்கள் படமாக்கப்பட்டிருப்பது ரசனை. அது K.V.ஆனந்தின் கைவந்த கலையாயிற்றே.
சூர்யாக்களின் தந்தையாக வரும் சச்சின் கெடேக்கர் ஏற்கெனவே தெய்வத் திருமகளில் அமலா பாலின் தந்தையாக நடித்தவர். மனிதர் அற்புதமாக நடித்துள்ளார்.அந்தக் கண்கள் மிரட்டல்.
தாயாக நடித்திருப்பவர் தாராவாம். பார்த்த முகமில்லை. ஆனால் தமிழ் சினிமாக்களின் வழமையாக உருகும் பாசமுள்ள தாய்.
நகைச்சுவைக்கெனத் தனியாக காட்சிகளோ, நகைச்சுவை நடிகர்களோ இல்லாதது தொய்வாக சில இடங்களில் இருந்தாலும், படம் இழுக்கும் இழுவையில் கடியான நகைச்சுவையும் இருந்திருந்தால் சுவிங்கம் தான்.
உளவாளி, பத்திரிகையாளராக வருகின்ற அந்த வெள்ளைக்காரப் பெண் திருப்பத்துக்கு உதவினாலும், அவர் உளவு பார்க்கும், அகப்படும், இறக்கும் இடங்களெல்லாம் ஏகத்துக்கு ஓட்டைகள்.
பாடல்களில் ரசிக்கவைத்த ஹரிஸ் ஜெயராஜ் பின்னணி இசையில் மீண்டும் ஒரு தடவை ஏமாற்றியிருக்கிறார்.
அதிலும் அந்த 'உக்வேனிய' துரத்தல் காட்சிகளில் சுத்தம்...
தமிழில் முதன் முதலாக performance capture technology முறையைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட காட்சிகளும், ரஷ்யா, சேர்பியா, குரோஷியா, அல்பேனியா போன்ற நாடுகளில் எடுக்கப்பட்ட காட்சிகளும் புதுமையானவை.
ஆனால் இவற்றையெல்லாம் விழுங்கிவிடுகின்றன இலகுவாக ஊகிக்கக்கூடிய கதைத் திருப்பங்களும், இழுவையான வெளிநாட்டுத் துப்பறியும் காட்சிகளும், சண்டைகளும்.
பீட்டர் ஹெய்னாம் சண்டைப் பயிற்றுவிப்பாளர். இடைவேளைக்கு முன்னதான சண்டைக்காட்சியில் இரட்டையர் மோதும் காட்சிகள் ரசிக்கவைத்தாலும் நீளமோ நீளம்.
அதேபோல அந்த வெளிநாட்டு சண்டைகளும் செம நீளம்.. கொட்டாவி வருகிறது.
ஒலிம்பிக் போட்டிகளும், பதக்கங்கள் வெல்ல ஒவ்வொரு நாடும் (முக்கியமாக வல்லரசுகள்) படும் பாடுகளைக் காட்டியிருக்கும் விதம் தமிழுக்குப் புதியது.
ரஷ்யப் பின்னணி இருப்பதால் எங்கே அமெரிக்க ஏகாதிபத்திய வால் என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற பயத்தில் படத்தின் ஆரம்பத்திலேயே
"இந்தப் படம் எந்த நாட்டையும் மோசமாகக் காட்டும் நோக்கத்தில் எடுக்கப்படவில்லை" என்ற அறிவித்தலையும் கொடுத்துவிடுகிறார்.
படத்தில் சொல்லப்பட்டுள்ள ரஷ்யாவிலிருந்து பிரிந்த அந்த உக்வேனியா எங்கே இருக்கிறது என்று யாராவது தேடப் போகிறார்கள்.
ஆனால் அங்கே சென்று குற்றவாளிகளையும் ஆதாரத்தையும் தேடும் காட்சிகள் ஒட்டவில்லை.
வில்லனை பாசம் கடந்து வெறுக்கச் செய்வதற்கு அந்த 'பத்து அப்பா' வசனத்தை வைத்து அபத்தமாக்குகிறார்.
சுவாரஸ்யமாக, பிரமிக்கும் விதத்தில் எடுத்திருக்கவேண்டிய படம் தறிகெட்டு முடியமாட்டாதா என்று கெஞ்சிக் கேட்கும் வகையில் முடிகிறது.
எந்த நேரத்தில் மாற்றான் என்று பெயர் வைத்தார்களோ, சூர்யாவுக்கும் K.V.ஆனந்துக்கும் இனித் தங்களை மீள்வாசித்துக்கொள்ளவேண்டிய நேரத்தை மாற்றான் தந்திருக்கிறது.
சூர்யாவின் அதிதீவிர ரசிகர்களையும், காஜல் அகர்வாலையும் மட்டும் கவரலாம்..
படம் தந்த சில பாடங்கள்..
எந்தவொரு கண்டுபிடிப்புமே சில தீய பக்கவிளைவுகளைத் தரக் கூடியதே..
சூர்யாவையும், சுபாவையும் மட்டும் நம்பி ரசிகர்களைக் கதை என்று ஒரு விஷயத்தில் சொதப்ப முடியாது.
மாற்றான் - ஏமாற்றினான்