நகூடீசிகா - திங்கள் ஸ்பெஷல் மசாலா

ARV Loshan
49

நகூடீசிகா - திங்கள் ஸ்பெஷல் மசாலா 


நன்றிகள்..

சனிக்கிழமை எனது பிறந்தநாளுக்கு ஏராளமான வாழ்த்துகளை சொல்லி,அனுப்பி,பதிவிட்டு என்னை ஆனந்த வெள்ளத்தில் திக்குமுக்காட செய்த அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும்,நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

முதல் நாளிலிருந்தே smsகள், Facebook மூலமான வாழ்த்துக்கள்,மின்னஞ்சல்கள் என்று வர ஆரம்பித்திருந்தன.
இது வழமை தானெனினும், இம்முறை வழமையை விட அதிகம்.
நானே வயது ஏறுகிறது என்று கொஞ்சம் கவலைப்பட ஆரம்பித்திருக்கும் நிலையில் இந்த வாழ்த்துகள் 'உங்கள் மீது அன்பு,அக்கறை கொள்ள நாமிருக்கிறோம்' என்று இந்த வாழ்த்துக்கள் உற்சாகம் தந்திருக்கின்றன.

அநேகமாக யாருக்கும் இம்முறை நான் sms மூலமாக நன்றி என்று பதில் அனுபவில்லை.
பின்னே இரண்டு நாட்களில், ஏன் இன்றும் கூட மூன்றாவது நாளாக வந்து சேர்ந்த smsகள் ஐந்நூறுக்கும் மேலே.
இத்தனைக்கும் பதில் அனுப்பப் போனால் செல்பேசி பில் ஏறி டப்பா டான்ஸ் ஆகிடும்..

எனவே தான அனைவர்க்கும் பொதுவாக நேற்று Facebookஇல் நன்றிகளைப் பகிர்ந்திருந்தேன்..இன்று விடியலில் நன்றி சொல்லிவிட்டேன்.இப்போது இந்தப் பதிவினூடாக.

இம்முறை நான் எதிர்பாராத ஒரு விடயம் பதிவுகளின் மூலமான வாழ்த்துக்கள்.

வந்தியத்தேவன், கங்கோன், சதீஷ், பிரபா, ஏத்தாழை இன்பாஸ், நிர்ரோஜா, ஜெகதீபன் இந்த ஆறு நண்பர்கள்/தம்பிமாருக்கும் நன்றிகள்.
உங்கள் அன்பு,நட்பு, நீங்கள் என் மேல் வைத்துள்ள அபிமானம்,அக்கறை நெகிழ வைக்கிறது.

மீண்டும் சொல்கிறேன்.. நான் கொடுத்து வைத்தவனே.


இன்னொரு விடயம்..
ஐந்தாம் திகதி இன்னொரு பதிவர் சிறுகதை மன்னர் சயந்தனுக்கும் பிறந்தநாள்.
இங்கே அவருக்கான வாழ்த்தையும் பதிகிறேன்.


கூத்து

இலங்கையில் நடைபெற்ற IIFA 2010 படுதோல்வியாகவும்,ஏமாற்றமாகவும் இறுதி நேரத்தில் இலங்கை சிங்கள திரை நட்சத்திரங்களுக்கு ஏமாற்றத்தையும்,அவமானத்தையும் தந்து, பின் ஜனாதிபதியின் மனக் கசப்புடன் அவசர அவசரமாக முடிந்துள்ளது.

ஒரு சர்வதேச விழா எப்படி ஏற்பாடு செய்யப்படக் கூடாதோ IIFA அப்படி நடந்திருக்கிறது.

அரசியல் சர்ச்சைகள் பல முன்னணி நட்சத்திரங்களைத் தடுத்து நிறுத்த,எதிர்பார்த்த அளவு விருந்தினர் வருகையோ,வெளிநாட்டு முதலீடுகளோ கிடைக்கவில்லை.

இது போதாக்குறைக்கு சனியன்று இலங்கை ஜனாதிபதி அழைத்த விருந்துக்கு முக்கிய நட்சத்திரங்கள் வராமல் விட்டது ஜனாதிபதியைக் கடுப்பாக்கி இருக்கிறது.
முக்கிய நட்சத்திரங்களில் அனில் கபூர் மட்டும் வந்திருந்தாராம்.

இதனாலேயே சனி இரவு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்ளவில்லையாம்.

அடுத்தது இலங்கையின் சிங்களத் திரைப்பட சிரேஷ்ட கலைஞர்களை ஒரு பொருட்டாகக் கூட எடுக்கவில்லையாம்.பலருக்கு அழைப்பில்லை;சிலரை அழைப்பை விரும்பினால்  சுற்றுலா சபை அலுவலகத்தில் வந்து எடுக்க சொல்லப்பட்டதாம்.
இவ்வளவுக்கும் வந்திருந்த ஹிந்தி நட்சத்திரங்களை விட எத்தனையோ விருதுகளை சர்வதேச மட்டத்தில் வென்றவர்கள் இந்த சிங்கள நட்சத்திரங்கள்.

சீராக அழைத்து செருப்படி வாங்கிய கதை இது.
Fashion show இல் சங்கக்கார இலங்கையின் பொலிவூட் அழகி ஜக்குளினுடனும், சல்மான் கான் செலினா ஜெயிட்லீயுடனும்..(ஆமாங்கோ அதே ட்விட்டர் பட அழகி தான்)

இந்த மூன்று நாள் கூத்துக்காக இலங்கையினால் செலவிடப்பட்ட மொத்தத் தொகை 700 மில்லியன் ரூபாய்.
இதில் நமது வரிப்பணம் மட்டும் 450 மில்லியன் ரூபாய்.

இப்போது எதிர்க்கட்சி இதற்கு விளக்கமும்,கணக்குக் காட்டும்படியும் கேட்கிறது..
பார்ப்போம் இனி நடக்கும் கூத்தை.



டீசில்வா

IIFA இலங்கையில் நடந்தது நல்லதோ கூடாதோ,
ஒரே ஒரு மகிழ்ச்சியை எனக்கு தந்தது.

என் ஆதர்ச கிரிக்கெட் வீரர், இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அரவிந்த டீ சில்வாவின் துடுப்பாட்டத்தை மீண்டும் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.

இந்திய நட்சத்திரங்களும், ஜடேஜா(பழைய அஜய் ஜடேஜா ),கைப் போன்ற வீரர்களும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சின்ன ஜனாதிபதி நாமல் ராஜபக்ச ஆகியோரோடு விளையாடிய IIFA கண்காட்சிப் போட்டியிலேயே டீ சில்வாவின் துடுப்பாட்டம் பார்க்கக் கிடைத்தது.

அதே நடை, அதே துடுப்பு சுழற்றி அடிக்கும் லாவகம், அவரது trade mark ஆன check drive,Point ஊடாக cut செய்துவிடும் லாவகம் என்று அரவிந்த என்றும் அரவிந்த தான்..

மூன்று நாளுக்கும் இலவச பாஸ் கிடைத்தும் அலுவலக அலவாங்குகள் காரணமாக போகக் கிடைக்காததில் உண்மையாகக் கவலைப் பட்டது இந்த கிரிக்கெட் போட்டிக்குத் தான்.

இப்போது அரவிந்த இலங்கை கிரிகெட் தேர்வாளர் குழுத் தலைவர்.
அடுத்த உலகக் கிண்ணம் வெல்லும் அணியைத் தெரிவு செய்யவே தான் எண்ணியுள்ளதாகவும்,தனது முடிவுகளில் எந்தவிதமான தலையீடும் இருக்கக் கூடாதென்றும் அறுதியாக சொல்லியிருக்கிறார்.
இவரது நேர்மை,துணிச்சலில் மிக நம்பிக்கையுடையவன் நான்.
மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

IPL மாதிரியாக மாகாண மட்ட Twenty 20 போட்டிகளை நடத்துவதைப் பற்றியும் சொல்லி இருக்கிறார்.

தலையீடுகள் இன்றி தெரிவுகளிலும் அபார ஆட்டம் ஆட வாழ்த்துகிறேன்.

இந்த கண்காட்சி போட்டிகளில் நான் ரசித்த இன்னொருவர் அஜய் ஜடேஜா.. இன்னமும் மனிதர் எப்படி விளையாடுகிறார்.
துடுப்பாட்டத்தில் நிதானம்,பந்துவீச்சில் துல்லியம்,களத் தடுப்பில் வேகம் என்று கலக்கினார்.

தனது அதிக ஆசையால் பாதியிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விளக்கப்பட்டிராவிட்டால் இப்போதும் உலகின் தலைசிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவர்.

 சில இந்திய Bollywood ஸ்டார்களும் சிறப்பாகவே விளையாடி இருந்தனர்.குறிப்பாக சுனில் ஷெட்டி.
பேசாமல் சிம்பாப்வேக்கு இவர்களில் ஒரு சிலரை அனுப்பி இருந்தால் கூட இந்தியா கொஞ்சமாவது தப்பி இருக்கும் போல.. ;)

சிம்பாப்வே + கிரிக்கெட்

ஏழு பேருக்கு ஓய்வு கொடுத்து இளையவரை அனுப்பி இந்தியா சிம்பாப்வேயில் மூக்குடைபட்டு விட்டது.
ரெய்னா தலைவராகக் கற்றுக் கொள்ள இன்னும் நிறையவே இருக்கு.
இந்திய சீனியர் அணிபோலவே ஜூனியர் அணியும் பந்துவீச்சிலும் களத்தடுப்பிலும் நிறையவே சொதப்புகிறது.

துடுப்பாட்டமும் தேவையான நேரங்களில்,அழுத்தங்களில் அகப்பட்டு அடிபட்டுப் போய்விடுகிறது.

இந்தத் தொடர் மூலம் தமது இமேஜ்களை உயர்த்திவிட்டுக் கொண்டோர் மூவர் மட்டுமே..
ரோஹித் ஷர்மா, விராட் கொஹ்லி, ரவீந்திர ஜடேஜா..

ஆசிய கிண்ணப் போட்டிக்கான அணி இன்று அல்லது நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்வாளர்கள் யாரையெல்லாம் தூக்கிக் கடாசப் போகிறார்கள் பார்க்கலாம்.

இலங்கையில் இளைய அணி கலக்குகிறது.
யார் யாரை நம்பி அனுப்பினார்களோ அவர்கள் தங்கள் வரவுகளை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்கள்.


சங்கா இனி நம்பி துடுப்பாட்டம் & தலைமைத்துவத்தில் கவனம் செலுத்தலாம்.
விக்கெட் காக்கவும் அதிரடிக்கவும் தினேஷ் சந்திமால் தயார்.

இளங் கன்றுகளுக்கே உள்ள பயமின்மை,துடிப்பு என்பவற்றுடன் திறமை,ஸ்திரமும் கொண்ட சரியான கலவை சந்திமால்.
கன்னி சதமும் பெற்று தன் வருகையை சத்தமாக அறிவித்துள்ளவருக்கு சபாஷ்.

அடுத்தவர் ஜீவன் மென்டிஸ்.
பத்து வருடப் பொறுமையும் தொடர்ச்சியான உள்ளூர் சகலதுறைக் கலக்கலும் வீண்போகவில்லை.
நம்பிக்கையான் சுழல் பந்துவீச்சும், தேவைக்கேற்ற துடுப்பாட்ட அணுகுமுறையும் ஜீவனை இலங்கையின் அடுத்த உலகக் கிண்ண அணியின் முக்கிய வீரராக மாற்றும் என நம்புகிறேன்.
இன்னொரு மென்டிஸ் இலங்கைக்கு..

டில்ஷான் மீண்டும் formக்கு திரும்பியுள்ளார்.. நல்ல சகுனம்.
கபுகெடற அதிரடிக்கிறார்.
குலசேகர,துஷார,ரண்டிவ் ஆகியோர் சிறப்பாகவே தொடர்கிறார்கள்.
ஏஞ்சலோ மத்தியூஸ் காயத்திலிருந்து மீள அபாரமான அணியொன்று தயார்.


சிம்பாப்வேயின் தொடரும் வளர்ச்சியும் உள்நாட்டில் கலக்கும் பெறுபேறுகளும் அபாரம்.
எந்த சுழல் பந்தை வைத்து இந்தியா உலகை மிரட்டியதோ அதை வைத்தே இந்தியாவுக்கு குழி தோண்டியது ஆச்சரியம்.
இந்தியாவுக்கெதிரான இரு வெற்றிகள் சிம்பாப்வேக்கு புதிய தெம்பு தரும்.
கலக்கட்டும் தொடர்ந்து.


காயம்,கால்பந்து + கார்ட்டூன் 

உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகளுக்கு இன்னும் நான்கே தினங்கள்.
தம்பி அஷோக்பரன் தமிழில் உலகக் கிண்ணக் கால்பந்து விடயங்களைப் பதிந்திட ஒரு வலைப்பதிவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.


இன்னும் ஒரு பதிவு கூட நான் பங்களிக்கவில்லை.
அசோக வருகிறேன். நான்கு நாட்களுக்குள் ஒரு பதிவை இடுகிறேன்.

முக்கிய அணிகளின் பல முக்கிய வீரர்கள் காயங்கள்,உபாதைகள் காரணமாக வெளியேறிவருவது  கவலை.
உலகக் கிண்ணம் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் களை இழந்துவிடுமோ என்று எண்ணவேண்டியுள்ளது.

இங்கிலாந்தின் நட்சத்திரம் பெக்காமைத் தொடர்ந்து தலைவர் ரியோ பெர்டினன்ட், ஜெர்மனியின் தலைவர் மிக்கேல் பலாக், பிரேசிலின் கோல் காப்பாளர் சீசர்,இத்தாலியின் பிர்லோ,நெதர்லாந்தின் ஆர்ஜன் றோப்பேன், ஐவரி கொஸ்டின் டீடியர் ட்ரோக்பா என்று வரிசையாக நட்சத்திரங்கள் காயமுற்றுக் கொண்டு வருகிறார்கள்.

ஒரே ஆறுதல் எனது அபிமான அணி ஆர்ஜெண்டீனாவின் லியோனல் மெஸ்ஸி காயத்திலிருந்து குணமடைகிறார் என்பது.

பார்க்கலாம்.. உலகின் விறுவிறு வேக உலகக் கிண்ணம் இம்முறை என்ன ஆச்சரியங்களைத் தருகிறது என்று..


அண்மையில் நான் ரசித்த ஒரு கார்ட்டூன்..
புவி வெப்பமாதலின் விளைவு..

Post a Comment

49Comments

Please Select Embedded Mode To show the Comment System.*