நாடு நல்ல நாடு .. ஆனாலும் நடப்பு சரியில்லை..
அண்மையில் நான் ஒலிபரப்பிய ஒரு பாடல்.. படம் ரசிகன் ஒரு ரசிகை..
இதே தான் நம் இலங்கை நிலையும் இன்று..
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இருப்பது ஒன்பது தினங்கள்..
ஒவ்வொரு நாளும் வன்முறைகளுக்குக் குறைவில்லை. வெல்லப் போவதும், அவர்களால் சுகபோகம் அனுபவிக்கப் போவதும் யார் யாரோ.. வதைபடுவது அப்பாவி தொண்டர்களும், மக்களுமே..
கட்சிகள் மாறுவதும், பெட்டிகள் கை மாறுவதும் கூட அன்றாட நிகழ்வுகளாக சலித்துப் போய்விட்டது.
நாளை இதுபற்றி விரிவாக ஒரு பதிவு போடலாம் என எண்ணியுள்ளேன்..
அரசியலின் இறுதிக்கட்ட பழிவாங்கல்களும் மறைமுகமாகவும், நேரடியாகவும் நடக்கின்றன.
இலங்கையின் 'பலமான' தனியார் வானொலியின் யாழ்ப்பாண அலைவரிசை அரசினால் எடுக்கப்பட்டு அரசின் மேற்பார்வையில் இருக்கும் வசந்த வானொலிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி தனியார் வானொலியின் உரிமையாளரும், அவரின் சிங்கள தொலைக்காட்சியும் பகிரங்கமாகவே அரசை விமர்சித்து, எதிர்ப்பதாலேயே இந்த நடவடிக்கையாம் என உள்வீட்டு தகவல்கள் கூறுகின்றன.
இன்று கிரிக்கெட்டில் அவதானித்த மூன்று சுவாரஸ்யங்கள்....
#1
"பங்களாதேஷ் அணி ஒரு மிக சராசரியான அணி.. அதன் பந்துவீச்சு மிகப் பலவீனமானது" இப்படியெல்லாம் நேற்றுப் பகிரங்கமாகக் கருத்து சொன்னவர் இந்திய அணியின் விரேந்தர் சேவாக்.
திடீரென இந்திய அணித்தலைவர் தோனி முதுகுப் பிடிப்பால் விலகிக் கொள்ள, சேவாகின் தலைமயில் இன்று டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்தியா 'சராசரி'யாகப் போனது..
போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி கொஞ்சம் முன்னதாகவே முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட வேளையில் இந்தியா 8 விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களோடு தடுமாறிக் கொண்டிருக்கிறது. சேவாக் அரைச் சதம் பெற்றார். சச்சின் ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்களோடு நிற்கிறார்.
சச்சின் இன்று தனது பொறுப்பான ஆட்டத்திநிடையே 13000௦௦௦ டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்தார். (எனினும் கவனம் .. பின்னாலேயே பொன்டிங் விரட்டி வருகிறார்.. இன்று பொன்டிங் பெற்ற 89 ஓட்டங்களோடு சச்சினுக்கும் அவருக்கும் இடையிலான இடைவெளி 1187 ஆக மாறியுள்ளது)
சச்சின் பதிவு எனக்கு விருது பெற்றுத் தந்த இதே நாளில் சச்சின் சாதனை படைத்ததும் பொருத்தம் தானே.. ;)
சேவாக்குக்கு இந்த வாய் வீரம் தேவையா? வாயை மூடிக் கொண்டு தன் வேலையைத் துடுப்பினால் மட்டும் காட்டலாம் தானே?
இலங்கை அணியோடு இறுதிப் போட்டியில் மோதியபோதும் சின்னப் பையன் வேலகேடேரவோடு முறுக்கிக் கொண்டார்.
தொடர்ந்து முன்னேறி வரும் வங்கப் புலிகளுக்கு வாழ்த்துக்கள்.. இத்தோடு நிற்காமல் எஞ்சியுள்ள நான்கு நாட்களும் போராடுங்கள்..
#2
இங்கிலாந்து பாவம்.. ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று, இரண்டு டெஸ்ட் போட்டிகளை கடுமையாகப் போராடி தோல்வியின் விளிம்பிலிருந்து தப்பித்துக் கொண்ட இங்கிலாந்திற்கு, இறுதி டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா அதிவேகமான, பவுன்சி ஆடுகளம் ஒன்றைத் தயார் செய்து வைத்த ஆப்பிருக்கே.. அது தான் இந்த ஆண்டின் முதல் ஆப்பு..
இரு முறை மயிரிழையில் வெற்றியைக் கோட்டைவிட்ட துரதிர்ஷ்டசாலி தென் ஆபிரிக்காவுக்கு இந்தப் போட்டியிலும் மழை வந்து அச்சுறுத்திக் கொண்டே இருந்தது.
மழை எங்கே மீண்டும் தென் ஆபிரிக்காவின் மனம் உடைக்குமோ என்று பார்த்தால் நான்காவது நாளான இன்றே இங்கிலாந்தை உருட்டி எடுத்துவிட்டார்கள் தென் ஆபிரிக்காவின் வேகப் பந்துவீச்சாளர்கள்.
#3
பாகிஸ்தான் தங்கள் அடுத்த டெஸ்ட் தோல்வியைப் பெரிய மனசோடு ஆஸ்திரேலியாவிடம் நாளை வாங்கிக் கொள்ளத் தீர்மானித்து விட்டார்கள்.
யூசுப்பின் தலையும் குறி வைக்கப்பட்டுள்ளதா? ஒரு நாள் தொடரின் பின்னர் தெரியும்..
============
இன்று ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளினி சினிமா மசாலா நிகழ்ச்சியொன்று தொகுத்துவழங்கிக் கொண்டிருந்தார்..
திரிஷாவுக்கு அவரது அம்மா வரன் தேடுவதாகவும் விரைவில் கல்யாணம் நடக்கலாம் என்றும் அதி முக்கியமான செய்தியை சொல்லிக் கொண்டிருந்தவர், அதற்குப் பின் ஒளிபரப்பிய பாடல்..
குருவி படத்திலிருந்து 'கெட்ட பையன் கெட்ட பையன்'
மாப்பிள்ளைமார் அந்தப் பாட்டைப் பார்த்தால் திருமணம் நடந்த மாதிரி தான்.. ;)
சாம்பிள்க்கு அந்தப் பாட்டிலிருந்து ஒரு படம்..