தொடர் பதிவுகள் என்றாலே தொந்தரவு என்று விலகிச்செல்லும் பலநேரம் இருந்தாலும், ஒருசில தொடர் பதிவுகளை வாசிக்கும் போது யாராவது என்னையும் இந்தத்தொடர் பதிவிற்கு அழைக்கமாட்டார்களா என்று ஆசையும் வரும்.
அப்படிப்பட்ட மூன்று தொடர் பதிவுகளை அண்மையில் பல பதிவுகளில் வாசித்திருந்தேன். அதில் ஒன்றுக்கு அன்புத் தம்பி சுபாங்கன் என்னை அழைத்துள்ளார்.
மகிழ்ச்சியுடன் பதிவிடுகிறேன்.
மூலப்பதிவிலிருந்து சுவைக்காக ஒரு சில விடயங்களை மட்டும் மாற்றிவிட்டேன்.
இதோ எனக்குப்பிடித்த என்னுடைய கட்சிக்காரர்களும், எதிர்க் கட்சிக்காரர்களும்..
எழுத்தாளர்&கவிஞர்
பிடித்தவர் : சுஜாதா
எழுத்து நடை, சிந்தனைப்போக்கு, காலத்துக்கேற்ப தன்னை புதுப்பித்துக்கொண்ட திறன், எதிர்காலத்தைப் பற்றி நிகழ்காலத்திலேயே சிந்தித்தவர் என்று இவர் பற்றி ஏராளம் சொல்லலாம். இவரது எழுத்து சிறுவயது முதலே என்னை கவர்ந்தது. சுஜாதாவின் இறப்பு என்னை மிகவும் பாதித்தது.

: வைரமுத்து
சிறுவயது முதலே இவரது பாடல்களால் ஈர்க்கப்பட்டு, கவிதைகளையும் நேசித்தேன்.

இவர்களிருவரையும் ஏன் பிடிக்கும் என்று எழுதப்போனால் ஒரு தனிப்பதிவே போடலாம்.அநேகமாக இவர்கள் இருவரதும் எல்லா நூல்களுமே நான் வாங்கிவைத்துள்ளேன்.
பிடிக்காதவர்: ஞானி (ஆவி ஞானியே தான்.அதாவது ஆனந்த விகடன் ஞானி), சோ வகையறாக்கள்.திடமான கொள்கையற்றவர்கள்; தாம் சாதிக்காமல் போதிக்க நினைப்பவர்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைத் திணிப்பதோடு இவர்களின் சில பிற்போக்கான சிந்தனைகள் எரிச்சலூட்டும்.
சிறுகதை என்று சிறுவர்களுக்கான கதைகளும். கவிதை என்று கதைகளை எழுதி வதைப்போரும், தமக்குத்தாமே 'கவிஞர்' மகுடம் ஒட்டிக்கொள்வோரும் கூட எனது பிடிக்காத எழுத்தாளர் பட்டியலில் உள்ளார்கள்.
நடிகர்
பிடித்தவர் : கமல்ஹாசன்
என்ன இவரிடம் இல்லை?
பிறவிக்கலைஞன், தாகம், தேடல், முயற்சி, பரந்த அறிவு எனப் பிடித்த குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

பிடிக்காதவர்: விஜய் என்று சொல்வேன் என்று நினைத்தால் தப்பு!
இவரை விட பிடிக்காத பெரிய பட்டியலே உள்ளது. நினைத்தாலே மனதில் சொல்லொணா எரிச்சல் வருகிற, மூஞ்சியில் மூன்று குத்துவிடலாம் என நினைக்கிற சிலர் – பிரஷாந், மனோஜ், முரளி, விக்ராந்த், 'ஆனந்த தாண்டவம்' ஹீரோ.. பெயரும் ஞாபகம் வருதில்ல
நடிகை
பிடித்தவர் : அசின், ஜோதிகா, ஸ்ரீதேவி
பின்னிருவரின் திருமணத்தின் பின்னதான ஓய்வின் பின் அசின் தான் என்னைக் குத்தகை எடுத்துள்ளார்.
மூவரதும் இயல்பான அழகு, ஆபாசமில்லாத நடிப்பு, பாத்திரமுணர்ந்த உணர்வு வெளிப்பாடுகள் இவைமட்டுமன்றி, மூவரின் கண்களும், உதடுகளும் அவர்களது சமகாலத்தவரை பின்தள்ளிவிட்டனர்.

பிடிக்காதவர்: த்ரிஷா, ஷ்ரேயா, ராதிகா
நடத்தை, நடிப்பு, dressing sense என்று எதுவுமே இவர்களிடம் எனக்கு பிடிப்பதில்லை. ரசித்ததைவிட அருவருத்ததே அதிகம். (த்ரிஷா, ராதிகாவின் வெகுசில படங்கள் பிடித்தவை)
இயக்குனர்
பிடித்தவர் : மணிரத்னம், பாசில், கமல்ஹாசன்
இம்மூவரினது இயக்கத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்தையும் நான் இதுவரை தவறவிட்டதில்லை. அவற்றுள் எந்தவொன்றும் பிடிக்காமல் போனதுமில்லை. என் ரசனைக்குகந்த விஷயங்களை, மேலும் தரமான ரசனையோடு தரும் சிற்பிகள்.

பிடிக்காதவர்: பேரரசு
மொக்கையை கூட ரசிக்கலாம் இது சக்கை.
கொடுமையோ கொடுமை.
இதுல வேற நடித்தும், பாடல் எழுதியும் வேறு கொல்கிறார். இனி இசையமைக்கவும் போறாராம்!
தாங்காது சாமி தாங்காது.
பாடகர்
பிடித்தவர்: எப்போதும் SPB
நடிப்புக்கு கமல் என்றால் பாடலுக்கு பாலு தான்!
திறமைகளும் அவற்றால் வந்த சாதனைகளும் குவிந்திருந்தாலும் தலைக்கனம் ஏறாத ஒரு அன்பு மலை! பண்பும், பணிவும், எந்தப்பாடலையும் ரசிக்க வைக்கும் அந்த ஈடுபாடும், இளையோரை ஊக்குவிக்கும் நல்ல மனதும் பிடிக்கும்.

வித்தியாசமான குரல்வளம் கொண்ட அருண்மொழியும் பிடிக்கும்.
பிடிக்காதவர்: தமிழில் பாடுகிறோம் என்று கொடுமையாகக் காதுகளில் ஈயம் கரைத்து ஊற்றித் தமிழைக்கொலை செய்யும் சுக்வீந்தர் சிங் மற்றும் உதித் நாராயணன்.
பாடகி
பிடித்தவர் : P.சுசீலா
தாய்மையின் கனிவு, காதலின் ஏக்கம், மனைவியின் அன்பு, தமிழின் இனிமை, பெண்மையின் இயல்பு என்ற அத்தனையையும் சம விகிதத்தில் கலந்த இந்தக் குயில் குரலின் பல பாடல்களில் மனதைத் தொலைத்தவன் நான்.

இவர் கலந்து கொண்ட மேடை நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி அவரிடம் வாழ்த்துக்கள் பெற்றது வாழ்நாளில் மிகப்பெருமையான விஷயம்.
சித்ரா, சுஜாதா அண்மைய புதிய பாடகி ஷ்ரேயா கோஷல், கல்யாணியும் இவரது சாயலுடையவர்கள் என்பதால் பிடிக்கும்.
பிடிக்காதவர் : மதுஸ்ரீ
A.R.ரஹ்மான் தமிழ்த்திரைப்பட பாடல்களுக்குத் தந்த சாபம்! இசைப்புயலின் இசையில் மட்டும் ஓரளவு திருத்தமாகப்பாடி மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் தமிழை வன் புணர்ச்சி செய்கிறார். இவரது தமிழ்க்கொலை தாங்காமல் இவரது சில பாடல்களை நான் ஒலிபரப்புவதே இல்லை.
இசையமைப்பாளர்
பிடித்தவர் - வித்யாசாகர்
முன்பிருந்தே இவர் மீது ஒரு கிறக்கம்,அனுதாபம்,இவரது மெட்டுக்கள் கேட்டு ஆச்சர்யம்.
இசைஞானி-இசைப்புயல் இருவரையும் ஈடு கொடுக்கக்கூடிய இசை ஞானம்.
பல மிகப் பெரும் வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தும் பெரியளவில் பேசப்படவில்லை.
மிகப் பெரும் ஹிட் பாடல்கள் கொடுத்தான் முன்னணி இசையமைப்பாளராக யாரும் ஏற்கிறார்கள் இல்லை என இவர் மீது ஒரு எனக்கு ஒரு இரக்கம் உள்ளது.

பிடிக்காதவர் - கார்த்திக் ராஜா
பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா கேட்ட பிறகு பெரிதாக வருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்ததோ என்னவோ இவர் மீது கோபமாக உள்ளது.
இவரது மெட்டுக்கள் எனக்கு சுத்தமாக பிடிப்பதில்லை.
விதிவிலக்கு - அடியே கிளியே -குடைக்குள் மழை
கிரிக்கெட் வீரர்
பிடித்தவர் -
பலபேர் இருந்தும்.. சட்டென்று மனதில் வருபவர் ரொஷான் மகாநாம. எளிமையான,நல்ல மனிதர். நேர்மையான நேர்த்தியான விளையாட்டுவீரர்.

பிடிக்காதவர் -
ஹர்பஜன் சிங்.. கண்டால் முகத்தில் ஓங்கிக் குத்துவிடவேண்டும் போல் இருக்கும் ஒரே ஒருவர் இவர் மட்டும்.
இவருக்கு அடுத்தபடியாக இவரது 'நண்பர்' ஸ்ரீசாந்தும் இருக்கிறார்
அரசியல்வாதி பற்றி நான் எதுவும் சொல்லவில்லை.
காரணம் பிடித்தவராக யாருமே இல்லை. (உயிருடன்)
பிடிக்காதவர் என்று யாரை சொல்வது என்று தெரிவுக் குழப்பம்.
இந்த தொடர் பதிவை தொடர நான் அழைக்கும் நால்வர் -