145 000 ???? ஆஸ்திரேலியருக்கு வெற்றி

ARV Loshan
0
நேற்று மெல்பேர்ன் நகரில் இடம்பெற்ற ஏலத்தில் 145 000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு
(121 938 அமெரிக்க டொலர்கள்) டொனால்ட் பிரட்மனின் முதலாவது துடுப்பு விலைபோயுள்ளது.என்னுடைய முன்னைய வலைப்பதிவில் அவுஸ்திரேலியர்கள் இந்த ஏலத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்று ஏலவிற்பனையாளர் சார்லஸ் லேச்கி கவலைப்பட்டதாக எழுதியிருந்தேன்.இதைப் பார்த்து (உனக்கே ஓவரா இல்லையா?) ரோஷம் வந்த அவுஸ்திரேலியர் ஒருவர் இதை ஏலத்தில் எடுத்துவிட்டார். அதுசரி தங்கள் நாட்டின் கௌரவச் சின்னம் ஒன்று தங்கள் நாட்டைவிட்டு செல்ல விட்டு விடுவார்களா?
ஆனால் இதிலுள்ள சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் பிரட்மன் இந்தத் துடுப்பின் மூலம் தனது முதலாவது போட்டியில் பெற்ற ஓட்டங்கள் 18 மற்றும் 1 மட்டுமே. (இந்தப் போட்டிக்குப் பிறகு அவுஸ்திரேலிய அணியிலிருந்தே பிரட்மன் நீக்கப்பட்டார்.அது தான் தனது வாழ்நாளில் கிரிக்கெட் அணியிலிருந்து பிரட்மன் நீக்கப்பட்ட ஒரே ஒரு சந்தர்ப்பம் ) இங்கிலாந்து அந்தத் தொடரில் அவுஸ்திரேலியாவைத் துவைத்தெடுத்தது. 4க்கு 1 என இங்கிலாந்து வெற்றி பெற்றது.


பின்னர் சிறுவருக்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஒரு சிட்னி செய்திப் பத்திரிகை நிறுவனத்துக்கு இந்தத் துடுப்பை அன்பளிப்பாக வழங்கினார்.(அதுக்குப் பிறகு வாங்கிய புதிய துடுப்புத் தான் சாதனை மேல் சாதனை படைத்ததே) அந்தத் துடுப்பிலே பிராட்மனின் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இரு அணி வீரர்களின் கை ஒப்பங்களும் இருக்கின்றன.

துடுப்பாட்ட சராசரியில் 100 இனை மயிரிழையில் நழுவவிட்ட பிரட்மன் வாழ்ந்த காலத்திலும் 100 இனை 8 ஆண்டுகளால் தவறவிட்டார். தனது 92வது வயதில் (2001ம் ஆண்டு) காலமானார்.

இருந்தாலும் 1000 பொன் இறந்தாலும் 1000 பொன் என்று சொல்வது யானைக்கு மட்டுமல்ல பிரட்மனுக்கும் பொருந்தும்.



Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*