வேட்டை

ARV Loshan
4

சில படங்களை முதல் நாள்/ முதல் வாரத்தில் பார்க்கத் தவறிவிட்டால் ஒன்றில் மிகத் தாமதமாகப் பார்ப்பேன்; அல்லது பார்க்காமலே தவறிவிடுவேன்.
வேட்டை பார்க்கும் வாய்ப்பு வெள்ளிக்கிழமை தான் இறுதியாகக் கிடைத்தது..



லிங்குசாமியின் ரன், ஆனந்தம், சண்டைக்கோழி, பையா நான்குதிரைப்படங்களும் ஏதோ ஒரு விதத்தில் பிடித்தே இருந்தவை.. தோல்வியுற்ற மற்ற ஜி, பீமா இரண்டும் கூட திரைக்கதை, இயக்கம் என்ற சில அம்சங்களுக்காக ரசிக்கக் கூடியனவாகவே இருந்தன.

ஆனால் வேட்டை திரைப்படத்தின் விளம்பரப் பேட்டிகள் என்று தொலைக்காட்சியில் ஏக அலட்டலாக இருந்தது கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது.
அதிலும் ஷமீரா ரெட்டி, அமலா பால் என்று பார்த்தாலே கொஞ்சம் கடுப்பாகும் இரண்டு நாயகியர் வேறு.

படம் ஆரம்பிக்கும்போதே ஆர்யாவின் பெயர் முதலாவதாகவும், மாதவனின் பெயர் இரண்டாவதாகவும் வந்து கடுப்பாக்கியது.
ஆனால் யுவனின் இசையில் பெயரோட்டம் ரசிக்க வைக்கிறது.
அதிலும் ஒரு பெயர் இதற்கு முதலில் UTV தயாரித்த வேறு  ஒருபடத்திலும் இந்தப் பெயர் துணுக்குற வைத்தது.
தயாரிப்பாளர் ஒருவரின் பெயர் - Screwvala ;)

கோழை அண்ணனுக்காக எதையும் துணிந்து செய்யும் துணிச்சல்காரத் தம்பி.. போலீசாகும் அண்ணனுக்காக தம்பி டியூட்டி செய்கிறார்.. வில்லன்களை அண்ணன்+ தம்பி சேர்ந்து வேட்டையாடும் கதை.. 70,80 களில் அடிக்கடி இரட்டைவேடக் கதைகளாகப் பார்த்த விடயத்தைக் காலத்துக்கு ஏற்ப கொஞ்சம் மாற்றி இரட்டைவேடம் இல்லாமல் அண்ணன் - தம்பியாகத் தந்துள்ளார் லிங்குசாமி.


மாதவன் அண்ணன்.. ஆனால் தம்பி ஆர்யா தான் ஹீரோ..

போலீஸ் வேடம் என்றவுடனே நம்ம மாஸ் ஹீரோக்கள் எல்லாரும் சிக்ஸ் பக், முறுக்கு மீசை என்று கிளம்ப மாதவனோ தொப்பையும் உப்பிய முகமுமாக வருகிறார்.. பாவமாக இருக்கிறது பார்க்கையில்.ஜோடி வேறு சமீரா.. இன்னும் பரிதாபம்.
அநேகமான காட்சிகளில் ஆர்யாவுக்கு அடங்கிய வேடமாக இருந்தாலும், இடைவேளைக்குப் பின்னர் ஆக்ரோஷமாகப் புறப்பட , அதன் பின் புகுந்து விளையாடுகிறார். ஆனாலும் இனி 'அலைபாயுதே' , 'ரன்' ஏன் 3 Idiots  மாதவனாகப் பார்க்க முடியாது என்பது கவலை தான்.

சண்டைக் காட்சிகளில் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் அசத்துவதும், நகைச்சுவைக் காட்சிகள் அலட்டலோடு கலக்குவதும், காதல் காட்சிகளில் கலக்கலாக ரசிக்க வைப்பதும் என்று படம் முழுக்க ஆர்யாவின் அதகளம் தான்.
லிங்குசாமி தனக்கே உரித்தான சில காட்சிகளில் ஆர்யாவை நன்கு பயன்படுத்திக்கொள்கிறார்.

அமலா பாலுடனான காதல் காட்சிகள் ஆர்யாவுக்கு அல்வா சாப்பிடுவது போல.. ரசித்து செய்கிறார் என்பது தெரிகிறது. குறிப்பாக லெக் பீஸ் சாப்பாடு காட்சியும், அமெரிக்க மாப்பிள்ளையை வைத்துக்கொண்டே நீண்ட கிஸ் அடிப்பதும், மாதவன் - சமீரா ரெட்டி முதலிரவின் போது அமலாவுடன் தனியாக உரசும் காட்சியும்...



சமீரா ரெட்டி - அக்கா, அண்ணி.. கொஞ்சம் நடிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஆனால் க்ளோஸ் அப் காட்சிகளிலும் வாய் திறந்து சிரிக்கையிலும் பயமுறுத்துகிறார். வில்லியாக யாராவது ஒரு இயக்குனர் வாய்ப்பொன்றைக் கொடுத்துப் பார்க்கலாமே..

அமலா பால் - முதல் காட்சிகள், அக்கா, தங்கை பாடல் காட்சிகளில் மேக் அப் வாய்க்கவில்லை. ஆனால் அதன் பின்னர் அசத்துகிறார்;கிறங்கடிக்கிறார்; கிளுகிளுக்க வைக்கிறார்.. பாடல் காட்சிகளில் இயக்குனர் முடியுமானவரை அமலா பாலை ஆடை நீக்கி அழகுப் பாலாகக் காட்ட முயன்றிருக்கிறார்.


பிரதான வில்லன் அஷுதோஷ் ராணா - திடகாத்திரமாக, கம்பீரமாக, நேரிய பார்வையுடன் இருக்கிறார். ஆனால் இறுதி சில நிமிடங்கள் வரை அவரை ஆர்யா, மாதவன் முன் சப்பையாக்கி விட்டது கொஞ்சம் இயக்குனர் கவனித்திருக்கவேண்டிய விடயம். ராணா இன்னும் சில படங்களில் கலக்குவார் என்பது நிச்சயம்.

இன்னொரு வில்லனாக வரும் முத்துக்குமாரும் நல்ல தெரிவு.

தம்பி ராமையா - ஒவ்வொரு படத்திலும் தான் வருகின்ற காட்சிகளில் கவனிப்பையும் கை தட்டலையும் பெற்றுக்கொள்கிறார். மாதவனைப் புகழும் காட்சிகளில் இவரது கண்கள் கலக்கல்.

நாசர் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.
 போதாக்குறைக்கு லிங்குசாமி ஒரு காட்சியிலும் சிறப்புத்தோற்றம் (?!) கொடுக்கிறார்.



வேட்டையில் லிங்குசாமி நடத்தி இருப்பது ஒரு திரைக்கதை ராஜபாட்டை (விக்ரம் படம் இல்லை). திரைக்கதையில் ஆனா லிங்கு ஒரு சாதாரண பழைய கதையை எடுத்துத் தன் பாணியில் சும்மா மினுக்கிக் கொடுத்திருக்கிறார். அதிலும் மாதவன் வீரமானவராக மாறிய பிறகு எதிரிகளுக்குக் கொடுக்கும் டிமிக்கியில் லிங்குவின் சாமர்த்தியங்கள் பளிச்சிடுகின்றன. காதல் காட்சிகளில் கிளுகிளுவையும் கலகலவையும் புகுத்தியதும் லிங்குசாமி டச்.
அதுபோல எந்த இடத்தில் எப்படியான பாடல்கள் வரவேண்டும் என்று சரியாகப் புகுத்துவதிலும் லிங்குசாமி கெட்டிக்காரர்.

யுவன் ஷங்கர் ராஜாவும் லிங்குசாமி படங்கள் என்று வந்தாலே தனி உற்சாகமாகிவிடுவார்.. பாடல்களில் மட்டுமில்லை; பின்னணி இசையிலும் சும்மா பின்னியிருக்கிறார்.

இன்னொரு மிக முக்கியமானவர், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. அசத்தல், அபாரம்.. சாதாரண காட்சியிலும் ஒரு பிரமிப்பைத் தருகிறார். சண்டைக் காட்சிகளை சும்மா பரபரக்க வைக்கிறார். பாடல் காட்சிகளிலும் பரவசமும் தருகிறது நீரவ் ஷாவின் கமெரா.. ஆனால் ஒன்று மட்டும் நீரவினால் முடியவில்லை.. சமீராவை அழகாகவும், மாதவனை ஸ்லிம்மாகவும் காட்ட.

பிருந்தா சாரதியின் வசனங்கள் நறுக் + சுருக்.. ரசிக்க வைக்கின்றன..

அன்டனியின் எடிட்டிங் பற்றி சொல்லவும் வேண்டுமா? வழமையான கலக்கல் தான்..
கூட்டணி என்றால் இப்படி வைத்து வெல்லவேண்டும் என்று சொல்லிக் காட்டி இருக்கிறார் லிங்குசாமி.


எந்த ஒரு சலிப்பும், சோர்வும் இல்லாமல் பல இடங்களிலி சிரித்துக்கொண்டே ரசிக்கக் கூடிய ஒரு பரபர சரவெடி மசாலாவைக் கொடுத்திருக்கிறார் லிங்குசாமி..
அவர் இசை வெளியீட்டில் இயக்குனர் ஷங்கரை அருகில் வைத்துக்கொண்டே சொன்ன மாதிரியே நண்பனுடன் சேர்ந்து வெற்றியையும் சுவீகரித்திருக்கிறார் வேட்டையுடன்.

வேட்டை - ரசனையான மசாலா மூட்டை.. தொடுகிறது வெற்றிக் கோட்டை




பி.கு - நேற்று நீண்ட நாட்களாகப் பார்க்கவேண்டும் என்று எதிர்பார்த்திருந்த 'போராளி' படமும் பார்த்துவிட்டேன்... 

  

Post a Comment

4Comments

Please Select Embedded Mode To show the Comment System.*