December 22, 2011

Tintin 2011 - டின்டின்எங்களில் அனேகரது சின்ன வயது ஹீரோ.. ஆங்கிலம் சரியாக வாசிக்க வராத காலத்திலேயே ஒட்ட வெட்டிய தலை முடியில் ஒரு கற்றை முடி மட்டும் குத்திட்டு நிற்க அப்போதே எமக்கு spike முடியலங்காரத்தை அறிமுகப்படுத்தியிருந்தவர் தன் செல்ல நாயுடன் பல்வேறு துப்பறியும் சாகசங்களில் ஈடுபட்ட டின்டின்.

அப்போது அம்மா தன் அலுவலகத்தின் நூலகத்திலிருந்து கொண்டுவரும் Adventures of Tintin, Asterix and Obelix படக் கதைகள் தான் பல புதிய ஆங்கில சொற்களைக் கற்றுக் கொடுத்திருந்தன.
Captain Haddock அடிக்கடி சொல்கின்ற Thundering thypoons, Blistering barnacles ஆகியன தான் நான் நினைவறிந்து முதல் தெரிந்த ஆங்கில வசவு வார்த்தைகள்...


இவற்றுள் நான் ரசனையோடு இப்போதும் மனதில் வைத்திருப்பது - 
"Billions of bilious blue blistering barnacles"


டின்டின் தன் அழகான வெள்ளை நாய் ஸ்னோவியுடன் சாகசங்களுக்காக செல்லும் இடங்கள் தான் நான் சென்ற முதலாவது வெளிநாட்டுப் பயணங்களாக இருந்து இருக்கும்..
சின்ன வயதிலே இந்தப் படக் கதைகளைத் தெரிந்தவரை நானும் தம்பிமாரும் வாசித்துக் கதைப் போக்கை ஓரளவு ஊகித்துக் கொள்வோம்.
மீதியை அம்மா வாசித்து டின்டின் சாகசங்களை முடித்து வைப்பார்.

அப்போதெல்லாம் எனது கொமிக்ஸ் நாயகர்கள் திரைப்படங்களாக வரமாட்டார்களா என்று நினைக்கும்போதெல்லாம் (அந்தச் சின்ன வயதில் ஜேம்ஸ் பொண்டைப் பெரிதாகப் பிடிக்காது - காதல் மன்னன் என்பதால்.. ஆனால் பதின்ம வயதில் ஜேம்ஸ் பொண்டைப் பார்த்து எரிச்சல் படவே ஆரம்பித்திருந்ததும் ஏங்கியதும் வேறு கதை) முகமூடி வீரர் மாயாவி, டின்டின் ஆகியோர் திரைப்படங்களில் வர மாட்டார்களா என்று தான் அதிகமாக விரும்பியிருக்கிறேன்.
இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குக்கும் இதே ஆசை + கனவு முப்பதாண்டுகளுக்கு மேல் இருந்திருக்கிறது என்பது எனதும் அதிர்ஷ்டம் தான்..

ஆனால் நான் ரசித்த எனது சின்ன வயது கொமிக்ஸ் நாயகன் Tintin எனது மகன் தன் அபிமான கார்ட்டூன், கொமிக்ஸ் நாயகர்களை ரசிக்கும் வயதில் தான் திரைப்படத்தில் வந்திருக்கிறார் என்பது ஒரு சுவாரஸ்ய விஷயம்.


 Performance capture 3D film / Motion  Capture முறை மூலம் எடுக்கப்பட்டு வந்துள்ள Animation படம் ஏற்கெனவே விளம்பரம் மூலமாக ஆர்வத்தைத் தூண்டி விட்டிருந்தது.
இலங்கையில் 3 D படங்கள் பார்க்கக் கூடிய திரையரங்கம் திறக்கப்பட்டதனால் நம்ம டின்டின்னை 3 D ஆகப் பார்க்க முடியும் என்று ஆசையுடன் இருந்தால் Twitter மூலமாக Elephant House நிறுவனம் நடத்திய போட்டியில் ஓசி டிக்கெட் கிடைத்தது.
(நாமல்லாம் யாரு- ஓசியில் கிடைத்தால் ஓயிலையும் குடிப்பமுல்ல)
Elephant House நிறுவனத்தால் காண்பிக்கப்பட்ட சிறப்புக்காட்சியைக் கையில் ஐஸ் சொக்குடன் ரசித்துப் பார்க்கும் வாய்ப்பு.
என்ன ஒன்று 3 D மட்டும் இல்லை. 

அபாரமான animation  காட்சிகளை 3 Dயும் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாக, விறுவிறுப்பாக ரசித்திருக்கலாம்.

ஸ்பீல்பெர்க்கின் முதலாவது முழுமையான அனிமேஷன் படமாம் இது. 
Raiders of the Lost Ark, Jurassic Park, Indiana Jones and the Kingdom of the Crystal Skull, War of the Worlds போன்ற அதிவீர சாகசப் படங்களை எடுத்த ஸ்பீல்பேர்க் இதை மட்டும் ஏன் அனிமேஷனாகத் தந்துள்ளார் என்பதற்கு படத்தின் பிரம்மாண்டமும், முக்கியமாக கப்பல் சண்டைக் காட்சிகள் + மொரோக்கோவில் இடம்பெறும் துரத்தல் காட்சிகள் (Chasing scenes) விடை சொல்கின்றன.

தற்செயலாக டின்டின் வாங்கும் ஒரு கப்பல் நினைவுச் சின்னத்துடன் (Unicorn) டின்டின்னைத் தொடரும் பிரச்சினைகளும், ஒன்றன் பின் ஒன்றாக ஒன்றோடு ஒன்று பின்னியதாக வரும் திருப்பங்களும், முடிச்சவிழ்ப்புக்களும், 17ஆம் நூற்றாண்டுக் கப்பல் + கடற்கொள்ளையர் யுத்தம் அதனுடன் இணைந்த புதையல் தேடலும் என்று வழமையான டின்டின் புத்தகங்களில் வரும் விறுவிறுப்பான கதை திரையில் விரிகிறது.


Unicorn என்ற கப்பலின் மாதிரிகள் மூன்றையும் தேடுவதும், அதனுள் இருக்கும் வரைபடங்கள் மூன்றுக்கான தேடலும், கப்பல் + கடற பயண சாகசங்கள், பாலைவன அலைச்சல், மொரோக்கோ துரத்தல் என்று பரபர, விறுவிறு தான்.

இதையெல்லாம் சும்மா நடிகர்களை வைத்து எடுத்திருப்பது சாத்தியமே இல்லைத் தான்.
ஆனாலும் பல பிரபல ஹொலிவூட் நடிகர்களின் பங்களிப்பும் உருவ வழியாகவும் (motion picturizing) , குரல் வழியாகவும் படத்தில் இருக்கிறது.
முக்கியமாக அண்மைய ஜேம்ஸ் பொண்ட் டானியல் க்ரெய்க். ஆனால் இவர் வில்லனாக நடித்திருக்கிறார்.(அல்லது இவர் முகம்)
டின்டின்னாக தோன்றி இருப்பவர் ஜேமி பெல். அந்த டின்டினின் பச்சிளம்பாலகன் தோற்றம் (குறிப்பாக கன்னச் சிவப்புடன்) அற்புதம்.

The Secret of Unicorn என்று பெயரிடப்பட்டாலும் இந்த டின்டின் திரைப்படம் இன்னும் இரண்டு கதைகளும் சேர்த்து பின்னிய திரைப்படத்துக்கான கதையாம் இது.

டின்டினின் அமைதியான, மதிநுட்பமான புத்தி சாதுரியங்கள், கப்டன் ஹடொக்கின் குடிவெறிக் கூத்துக்கள், முன் கோப மூர்க்கங்கள், தொம்சன் இரட்டையரின் பிரசன்னங்கள், ஸ்னோவி திடீர்த் திருப்பங்களைக் கொண்டு வருவது, வில்லன் குழுவின் அட்டகாசம் என்று ஒரு total action + entertaining package.படத்தில் அதிகமாக நான் ரசித்தவை -

பாத்திரங்களை ஒரு அசைவு, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாங்கைக் கூட செயற்கை ஆக்காமல் இயல்பான மனிதர்களைத் திரையில் பார்ப்பது போலவே காட்சிப்படுத்தியிருக்கும் குழு பாராட்டுக்களை வெல்கிறது.

படத்தின் ஆரம்ப எழுத்தோட்டம். என்ன ஒரு படைப்பாற்றல்....

சண்டைக் காட்சிகள், துரத்தல் காட்சிகள் மிரட்டல்.
அதிலும் 17ஆம் நூற்றாண்டு கப்பல் யுத்தம், பின்னர் மொரோக்கோ மோட்டார் சைக்கிள் துரத்தல் இரண்டும் தத்ரூபம்.
டின்டின் - ஹடொக்கின் முதல் சந்திப்பு மோதலும், அதன் பின் 17ஆம் நூற்றாண்டுக் கதையை டின்டின்னை வதைத்துக் கொண்டே சுவாரஸ்யமாக ஹடொக் சொல்லும் இடமும்..

துறைமுகத்தில் ஹடொக்கும் வில்லனும் பாரம் உயர்த்திகளை வைத்துப் போடும் சண்டை.. 
இவர்கள் இருவரின் முன்னோர்கள் செய்த வாட்சண்டையை ராட்சத தனமாக இயக்குனர் ஞாபகப்படுத்துகிறார்.

தமிழில் ஷங்கரின் எந்திரன் என்ற மாபெரும் கனவை சன் பிக்சர்ஸ் மூலம் மாறன் எவ்வாறு பணத்தைக் கொட்டிக் கொடுத்து சாத்தியமாக்கினாரோ அதே போல ஸ்பீல்பேர்க்கினதும் எமதும் கனவுகளை நனவாக்க உதவிய தயாரிப்பாளர் பீட்டர் ஜாக்சனும் எம் நன்றிக்குரியவராகிறார்.

என் பக்கத்தில் அமர்ந்து தன்னை மறந்து டின்டின் பரவசப்பட்ட ஹர்ஷு போலவே நானும் எனது சிறிய வயதுப் பராயத்துக்கு செல்ல வைத்த டின்டின் பரவச அனுபவத்தை முடிந்தால் ஒருதடவை அனுபவித்திடுங்கள்...

ஸ்பீல்பெர்க் + ஜாக்சன் சேர்ந்து இந்தப் படத்தின் வெற்றியின் தொடர்ச்சியாக இன்னொரு படமும் தருவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.16 comments:

Jay said...

சிறுவயதில் (5ம் ஆண்டு என்று நினைக்கின்றேன்) முதன் முதலில் டின் டின் புத்தகங்களை மட்டக்களப்பில் இருந்த ஒரு உறவினர் வீட்டில் வாசித்தேன். அரைவாசி நான் வாசிக்க மிகுதியை அந்த உறவினர் வாசித்து முடித்தார். அந்தக் காலத்தில் ஆங்கல அறிவு அப்படி அதி உச்சத்தில் இருந்ததாக்கும் ;)

திரைப்படமாக வருகின்றது என்றதும் சந்தோஷப் பட்டவர்களில் நானும் ஒருவன். அனைத்துப் புத்தகங்களையும் அடியேன் வாசித்து விட்டேன். ஒரு காமிக்ஸ் விரும்பி என்பதால் டின் டின் புத்தகங்களை எப்போதோ வாசித்து முடித்தாகவிட்டது. அத்துடன் புத்தகங்களை பின்னர் புத்தகங்களைத் தழுவி வந்த கார்டூன்களையும் வாசித்து விட்டேன்.

டின் டின் போலவே மிகவும் இரசித்து வாசித்த காமிக்ஸ் புத்தகம் அஸ்ரிக்ஸ். கோல் கிராமத்தவர் உரோமா புரி அரசிற்கு எதிராக போராடும் நகைச்சுவைக் கார்ட்டூன்.

பகீ said...

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து கொமிக்ஸ் புத்தகங்கள் மீதிருந்த தீராத காதல் தமிழ் கொமிக்ஸ் கிடைக்காத நாட்களில் ஆங்கில கொமிக்ஸ்களை தேட வைத்தது. சாதாரண தரம் படிக்கின்ற காலத்தில் கிடைத்ததுதான் ரின்ரின் (அல்லது டின் டின்?). ஒரே மூச்சில் 15 அல்லது 16 புத்தகங்களை வாசித்ததாக நினைவு (ஏன் இன்னமும் தமிழ் பதிப்பு வரவில்லை?).

அடிக்கடி தலை காட்டாவிட்டாலும் தொம்சன் & தொம்ப்சன் நகைச்சுவையும், பேராசிரியரின் ஞாபக மறதியும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவை.

ரின்ரின் போலவே சிரிக்கவைத்தவர்கள் மயூரேசன் சொன்னதுபோல் அஸ்ரிக்ஸ் & ஒப்ளிக்ஸ் மற்றும் லக்கிலூக்.

மேற்குறிப்பிட்ட இரு படக்கதைகளும் pdf கோப்புக்களாய் உள்ளன யாராவது வாசிக்க விரும்பின் எங்காவது தரவேற்றி விடுகின்றேன்.

ARV Loshan said...

மயூரேசன் - நாமளும் அப்பிடித் தான் :) படங்களை வைத்தே ஆங்கிலக் கதைகளை சொல்லிடுவமாக்கும் ;)
நான் வாசித்ததே படக் கதைப் புத்தகங்கலாத் தான். இப்போது புத்தகக் கடைகள் போனாலும் பார்க்க ஆசையா இருக்கும்

ARV Loshan said...

பகீ -

ரின்ரின் (அல்லது டின் டின்?)//
எனக்கு T என்றால் டின்டின் தான் ;)

ஏன் இன்னமும் தமிழ் பதிப்பு வரவில்லை?//
அதே தான் எனது ஏக்கமும்? ஒருவேளை அதே பிரதிபலிப்பைக் கொண்டுவர முடியாதோ?

மேற்குறிப்பிட்ட இரு படக்கதைகளும் pdf கோப்புக்களாய் உள்ளன யாராவது வாசிக்க விரும்பின் எங்காவது தரவேற்றி விடுகின்றேன்.//

ப்ளீஸ் செய்யுங்கள்.. எத்தனை தரமும் வாசிக்கலாம் :)

கார்த்தி said...

அப்ப படத்த மட்டும் பாத்து கதையை ஊகிச்சிருக்கிறம். ஆன முந்தி காட்டுன் அனிமேசன் படங்களிலிருந்த ஆர்வம் இப்ப துளியளவும் இல்லை.

நிரூஜா said...

டின் டின் எனக்கு வாசிக்க கிடைக்கவில்லை. ஆனால் பிற்காலத்தில் கார்ட்டூனாக பல கதைகள் பார்த்துள்ளேன். இங்கு தேடித்தான் பார்க்கவேணும். எந்த திரையரங்கில் போடுகின்றார்கள் எண்டு

K. Sethu | கா. சேது said...

//Elephant House நிறுவனத்தால் காண்பிக்கப்பட்ட சிறப்புக்காட்சியைக் கையில் ஐஸ் சொக்குடன் ரசித்துப் பார்க்கும் வாய்ப்பு.//

அதான் நான் புறக்கணித்தேன். மாறாக "ஐஸ் கிரீம் சாண்விச்" ஒன்னு ஓசியா கொடுத்திருந்தால் நாமளும் ஓடி வந்திருப்போமுல்ல. ;>)

Vimalaharan said...

அண்ணா நீங்களும் காமிக்ஸ் ரசிகரா? ரொம்ப நல்லம். பிறகு என்ன நீங்களும் எங்க சாதிதான்

//

ஸ்பீல்பேர்க் இதை மட்டும் ஏன் அனிமேஷனாகத் தந்துள்ளார் என்பதற்கு படத்தின் பிரம்மாண்டமும், முக்கியமாக கப்பல் சண்டைக் காட்சிகள் + மொரோக்கோவில் இடம்பெறும் துரத்தல் காட்சிகள் (Chasing scenes) விடை சொல்கின்றன.

//

நானும் ஸ்பில்பேர்க் ஏன் அனிமேஷன் படமாக எடுக்கிறார் என்று யோசித்தேன். நீங்கள் சொன்னது நியாயமாக படுகிறது.

anuthinan said...

அண்ணா நானும் உங்களை போலவே, என்ன நான் டின் டின்னை அதிகம் ரசித்தது தொலைகாட்சியில்தான்......!

எனது கனவு கார்ட்டூன் ஹீரோக்களில் அவனும் ஒருவன்...................!

தர்ஷன் said...

wow எனக்கு பிடித்த காமிக்ஸ் கதாநாயகனைப் பற்றிய பதிவு.
காமிக்ஸாக வாசிக்க முன் எனக்கு ரூபவாஹினி கார்ட்டூன் தொடரில்தான் டின் டின் அறிமுகமானார் வியாழன் 6 மணிக்கு என நினைக்கிறேன்.

கெப்டன் ஹெடோக் சிங்களத்தில் கர கரப்பான குரலில் "බිබිලි නගින බෙලිකටු" எனச் சொல்வார்.

அதற்கு பிறகு அம்மாவை நச்சரித்து புத்தகங்களை வாங்க முயன்றால் கண்டி தமிழ் கடைகளில் ராணி காமிக்ஸும்,விஜயனின் லயன்,முத்து வகையறாவும்தான் இருந்தது. அப்புறம் குணசேனவில் வாங்கினோம். தெரிந்த அரைகுறை ஆங்கிலத்திலேயே மீண்டும் மீண்டும் படித்தேன்.

படம் இலங்கையில் ரீலீஸாகாது எனத் தெரிந்ததால் படத்தை நெட்லத்தான் பார்த்தேன். அதிலேயே அருமையாகத்தான் இருந்தது.

3 காமிக்ஸுகளையும் அருமையாக பிணைத்திருந்தார். ஸ்பீல்பெர்க் போலவே பீட்டர் ஜாக்ஸனுக்கும் பெரிய பங்கு இருக்கிறது படமாக்கலில்.

Bavan said...

டின்டின்..:D
நான் டிவியில்தான் பார்த்திருக்கிறேன் :-))

ராணிக்காமிக்ஸ் பழைய புத்தகக் கடையில் வாங்கிப் படிப்பது வழக்கம் :D

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த நாள் ஞாபகம் வந்தது.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

திண்டுக்கல் தனபாலன் said...

த.ம. 5

sinmajan said...

யாழ் இந்து நூலகத்தில் இந்தப் புத்தகங்களை யாரும் எடுத்துவிடக்கூடாதே என மறைத்துவைத்துவிட்டு ஒவ்வொன்றாக எடுத்துப் படித்ததை நினைத்தால் இப்போது சிரிப்புத்தான் வருகின்றது..நிச்சயம் பார்க்கவேண்டும்

sinmajan said...

யாழ் இந்து நூலகத்தில் இந்தப் புத்தகங்களை யாரும் எடுத்துவிடக்கூடாதே என மறைத்துவைத்துவிட்டு ஒவ்வொன்றாக எடுத்துப் படித்ததை நினைத்தால் இப்போது சிரிப்புத்தான் வருகின்றது..நிச்சயம் பார்க்கவேண்டும்

Media 1st said...

நானும் 3D இல் பார்த்தேன் அருமை..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner