சும்மா இணையத் தளத்தை மேய்ந்து கொண்டிருந்த போது, ஒரு சுவாரஸ்யமான சினிமாச் செய்தி தட்டுப்பட்டது.
நாக்க மூக்கு என்று ஒரு புதிய திரைப்படத்தை ஆரம்பித்துள்ளார்களாம். பந்தயம் ஹீரோ நிதின் சத்யா ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு நாக்க மூக்கு என்று பெயர் வைத்துள்ளனர். முக்க என்று வைத்தால் பொருள் இல்லாமல் போகும் என்பதற்காக மூக்கு என்று வைத்துள்ளனர். படத்தை கே.ஜி. ஜவஹர் இயக்குகிறார்.
அந்தப் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும்,கதை கைவசம் இல்லாவிட்டால்,நான் ஒரு கதை வைத்துள்ளேன்.. இயக்குனர் ஜவகர் விரும்பினால் என்னைத் தொடர்புகொள்ளலாம்.
கதை ரொம்ப சிம்பிள் ஆனது.. ஆனாலும் செண்டிமெண்ட் காட்சிகள் போட்டு எல்லோரையும்(குறிப்பாக பெண்களை)பிழியப் பிழிய அழப்பண்ணலாம்.
ஆனால் கதாநாயகன் நிதின் சத்யா கொஞ்சம் தியாகம் செய்யவேண்டி இருக்கும்.பல பிரபல ஹீரோக்கள் கதாபாத்திரங்களுக்காக மொட்டை போட்டபோது இவருக்கு இது பெரிய பிரேக்கைக் கொடுக்கும். (சத்யராஜ்,விக்ரம்,சூர்யா போன்றோர் மொட்டை போட்ட பிறகே மேலும் உயர்ந்தனர்) வேறொன்றும் இல்லை நிதின் சத்யா நாக்கை எடுக்க வேண்டிஇருக்கும்.(இதைக் கேட்டே அசந்துபோயிட்டா எப்படி? கதாநாயகி மூக்கையே எடுக்கவேண்டி இருக்கும்.. )
ஆமாம், நாக்கற்ற ஆணுக்கும் மூக்கற்ற பெண்ணுக்கும் இடையில் காதல் பிறப்பது தான் கதை.. அது தான்.. நாக்க மூக்கு
வில்லன்கள்,நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் அவர்கள் பாடு,, முழுமையான கதையை இங்கே சொன்னால் நாளைக்கே ஒரு திரைப்படம் எடுத்துவிடுவார்கள் என்பதால் முழு உரிமையும் என்னிடமே உள்ளது, யார் வேண்டுமானாலும் தரவேண்டியதைத் தந்து பெறவேண்டிய கதையைப் பெறலாம்..
அன்பானவர்களே.. இதே போல ஒரு திரைப்படம் வந்தால் நான் வழக்குத் தாக்கல் செய்யும்போது நீங்கள் சாட்சிகளாக வரவேண்டிய கடப்பாடும் உண்டு!